ஈரானில் இன்னும் முதல்கட்டப் பரவல்தான் நீடித்துவருகிறது என்று கரோனா பரவல் தொடர்பாக ஈரானிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரான் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் சிமா சதாத் லாரி கூறுகையில், “தற்போது ஈரானின் எல்லையோர நகரங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஈரானில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப மாதங்களில் இந்த நகரங்களில் பெரிய அளவில் தொற்று ஏற்படவில்லை.
தற்போதுதான் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே ஈரானில் இன்னும் முதல்கட்டப் பரவல்தான் நீடித்து வருகிறது. ஆரம்பத்தில் கரோனா பரவல் உச்சம் தொட்ட நகரங்களில் மீண்டும் பரவல் ஏற்படத் தொடங்கினால்தான் நாம் அதை இரண்டாம் கட்டப் பரவலாகக் கூற முடியும்” என்றார்.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்று சிமா சதாத் லாரி தெரிவித்தார்.
ஈரானில் 2.25 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1.86 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று மட்டும் ஈரானில் 162 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இதுவே ஈரானில் இதுவரையில் ஏற்பட்ட அதிகபட்ச ஒரு நாள் இறப்பு விகிதமாகும். ஈரானில் கரோனாவுக்குப் இதுவரை 10,670 பேர் பலியாகி உள்ளனர்.