உலகம்

59 செயலிகளுக்கு தடை: இந்தியாவின் முடிவு கவலை அளிக்கிறது - சீனா

செய்திப்பிரிவு

பாதுகாப்பு பிரச்சனைகளை காரணம் காட்டி சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளை தடை செய்த இந்தியாவின் முடிவு குறித்து கவலை கொண்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்துக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தார்கள். ஆனால், சீனா தரப்பில் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்தார்கள் என்பது குறித்து இதுவரை அந்நாட்டு ராணுவம் தெரிவிக்கவில்லை.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் வகையில் இரு நாட்டு ராணுவத் தலைமை கமாண்டர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த செல்போன் செயலிகளால் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் வருவதாகப் புகார் வந்ததையடுத்து 59 செயலிகளை இந்திய அரசு நேற்று தடை செய்தது.

இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு சீனா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்தியாவின் நடவடிக்கை குறித்து சீனா கடும் கவலை கொண்டுள்ளது. நாங்கள் நிலைமையை கவனித்து கொண்டிருக்கிறோம்.

சீன அரசாங்கம் எப்போதும் சீன வணிகங்களை சர்வதேச விதிகள், உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன்”என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT