மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 600 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 25,770 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் தரப்பில், “ மெக்சிகோவில் கரோனா தொற்று ஒருப்பக்கம் அதிகரித்து வரும் நிலையில் கரோனா பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 600 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பலி எண்ணிக்கை 25,770 ஆக அதிகரித்துள்ளது. மெக்சிகோவில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவில் கரோனா இறப்பு கடந்த வாரம் 21,000 ஆக இருந்தது. இந்த நிலையில் ஒருவாரத்தில் 5,000 பேர்வரை கரோனாவுக்கு பலியாகி உள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் உலக நாடுகளிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,000 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் கரோனா பாதிப்பு 25,05,593 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை இதுவரை 1,25,480 ஆக பதிவாகி உள்ளது.
அமெரிக்காவை அடுத்து பிரேசில், பிரிட்டன் ஆகிய நாடுகளில் கரோனா பலி அதிகமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
தற்போது உலகில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுளனர்.