வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு வருகிற நிலையில், அதில் சில தளர்வுகளைக் கொண்டுவர பிரிட்டன் அரசு பரிசீலித்து வருகிறது.
கரோனா தொற்று குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்த பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.
ஜூன் 8-ம் தேதி முதல் வெளிநாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளும், பிரிட்டன் குடிமக்களும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
பயணிகள் விடுதிகளிலோ அல்லது வீடுகளிளோ 14 நாட்களுக்குத் தனித்து இருக்க வேண்டும். மீறினால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம் தொடர் சரிவில் இருந்து வருகிற நிலையில் இந்தத் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டால் பிரிட்டனுக்கு வருவது பலருக்கும் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பிரிட்டனில் சுற்றுலாவுக்கான மாதம். இந்நிலையில் இந்தக் கட்டுபாடு விமர்சனத்துக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டில் தளர்வு கொண்டு வர பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளைத் தனிமைப்படுத்துவதாகக் கூறப்பட்டது. இதில் அயர்லாந்து தவிர்த்து பிற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனித்து இருக்க வேண்டும்.
இந்நிலையில் கரோனா தொற்று குறைவாக இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் விலக்கு அளிக்க பிரிட்டன் பரிசீலித்து வருகிறது.