வளைகுடா நாடுகளில் கரோனா தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் இரு மடங்காக உயர்ந்து 4 லட்சத்தை எட்டியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஓமன் ஆகிய வளைகுடா நாடுகளில் கரோனா எண்ணிக்கை கடந்த மே மாத இறுதியில் 2.3 லட்சம் அளவில் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது.
தினசரி தொற்று எண்ணிக்கை 900-ல் இருந்து 400 ஆகக் குறைந்துள்ள நிலையில், மார்ச் மாதத்திலிருந்து நடைமுறையில் இருந்தவந்த இரவு நேர ஊரடங்கை கடந்த புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகம் நீக்கியது.
மூன்று மாதமாக நடைமுறைப்படுத்திய ஊரடங்கை கடந்த ஞாயிறு அன்று சவுதி அரேபியா முழுமையாக நீக்கியது. வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியாவில்தான் அதிகமாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரையில் அங்கு கரோனா தொற்று 1.71 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 1,428 பேர் கரோனா வைரஸால் பலியாகியுள்ளனர்.
சவுதி அரேபியாவைத் தொடர்ந்து கத்தாரில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரையில் 91,838 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 106 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் வணிக வளாகங்கள், விடுதிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. ஜூலை 7-ம் தேதி முதல் வெளிநாட்டு விமானச் சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 1-ம் தேதி முதல் தொற்று குறைவாக உள்ள நாடுகளிடையே விமானச் சேவைக்கு கத்தாரும் அனுமதி வழங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் குவைத்தில் மட்டும் ஊரடங்கு இன்னும் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.