உலக முழுவதும் கரோனாவால் தொற்றால் சுமார் 96, 09,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் கூறும்போது, “ கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது உலகம் முழுவதும் சுமார் 96, 09,829 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விரைவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கவுள்ளது.
கரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,91,856 ஆக பதிவாகி உள்ளது. 52, 50,085 பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு மற்றும் தொற்று எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் பிரேசில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்
இந்தச் சூழலில் டெக்ஸாமெதாசோன் ஸ்டெராய்ட் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 35% பேரையும் கூடுதல் பிராணவாயு தேவைப்படும் கரோனா நோயாளிகளில் 20% பேர் மரணங்களைத் தடுத்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறியதையடுத்து அம்மாத்திரைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும்வரை சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் மட்டுமே தற்போதைக்கு தீர்வு என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.