தெற்கு சூடானில் எண்ணெய் டேங்கர் லாரி தீப்பற்றி வெடித்த விபத்தில் பலியானோர் எண் ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு சூடானில் தலைநகர் ஜுபாவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் மரிடி என்ற சிறிய நகருக்கு முன் எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று கடந்த புதன்கிழமை விபத்துக்குள்ளாகி நின்றது.
விபத்தை தொடர்ந்து லாரியின் டேங்கரில் இருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதால், உள்ளூர் மக்கள் அங்கு திரண்டு எண்ணெய் சேகரித்தனர். இந்நிலையில் அந்த லாரி தீப்பற்றி வெடித்து சிதறியது. இதில் 85-க்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும் சுமார் 150 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜான் சகி என்ற உள்ளூர் அதிகாரி நேற்று கூறும்போது, விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார். இந்த நிலையில் காயமடைந்தோர் சிகிச்சை பெறும் மரிடி நகர மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் டேங்கர் லாரிகள் விபத்துக்குள்ளாகும் போது எண்ணெய் பிடிப்பதற்காக பெருமளவில் மக்கள் கூடுவது வழக்கமாக உள்ளது. இதுபோன்ற நேரங்களில் லாரி தீப்பற்றி வெடித்து, பலர் உயிரிழக்கும் சம்ப வங்களும் பலமுறை நடந்துள்ளன.
தெற்கு சூடானில் கடந்த 21 மாத உள்நாட்டுப் போரால் அதன் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. வறுமை மற்றும் வன்முறை காரணமாக 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 29-ம் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந் தம் ஏற்பட்டது. என்றாலும் இந்த ஒப்பந்தம் அடிக்கடி மீறப்படுகிறது.