இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,000-ஐக் கடந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க மருத்துவப் பல்கலைகழகமான ஜான்ஸ் ஹாப்கின்ஸ் வெளியிட்ட தகவலில், ''இந்தோனேசியாவில் பொருளாதார நடவடிக்கைகளுக்காக வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளித்த நிலையில் அங்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தோனேசியாவில் கரோனாவால் சுமார் 50,187 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 20,000 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைய 2,620 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்க, கரோனா பரிசோதனைகள் குறைவாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளது.
ஜூலை மாதம் இந்தோனேசியாவில் இன்னும் கூடுதலாக வணிகச் செயல்பாடுகளுக்குத் தளர்வுகள் ஏற்படுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆசிய நாடுகளிலே இந்தோனேசியாவில்தான் சீனாவுக்கு அடுத்து அதிகப்படியான உயிரிழப்பு கரோனாவால் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் தொழில் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கியுள்ள நிலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் உள்நாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகினர். இந்நிலையில் அவசரத் தேவைகளைக் கணக்கில்கொண்டு போக்குவரத்துக்கு விதித்திருந்த தடையை இந்தோனேசிய அரசு கடந்த மாதம் தளர்த்தியது. மேலும், அங்கு விமானச் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.