உலகம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் பத்ஹிஸ் மாகாணத்தில் உள்ள ராணுவ சோதனைச் சாவடியில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் தரப்பில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆப்கன் அரசு சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது அதிபர் அஷ்ரப் கானிக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT