அடுத்த வாரம் நடைபெறும் சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 பேர் உட்பட 181 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரதமர் லீ சியன் லூங் தலைமையிலான ஆளும் கட்சியின் 50 ஆண்டுகால செல்வாக்கு இத்தேர்தலில் வாக்காளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட உள்ளது.
நேற்று வேட்புமனு தாக்கல் செய்த இந்திய வம்சாவளி வேட் பாளர்களில், சட்டம் மற்றும் வெளி யுறவு அமைச்சர் கே.சண்முகம், பிரதமர் அலுவலக அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஆளும் மக்கள் நடவடிக்கை கட்சியை (பிஏபி) சேர்ந்தவர்கள்.
பிஏபி கட்சியின் மூத்த தலைவரும் துணை பிரதமருமான தர்மன் சண்முகரத்தினம், அரசியல்வாதியாக மாறிய பொருளாதார நிபுணர் கென்னத் ஜெயரத்தினம் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இலங்கை வம்சாவளியை சேர்ந்தவர்கள்.
மொத்தம் 89 உறுப்பினர்களைக் கொண்ட சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தற்போதைய பதவிக்காலம் 2017 ஜனவரி வரை உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வகையில், பிரதமரின் ஆலோசனையின் பேரில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் கெங் யாம் உத்தரவிட்டார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவினால் நிறுவப்பட்ட பிஏபி சிங்கப்பூரை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சிகள் பிரிந்து நிற்பதால் வரும் தேர்தலில் இக்கட்சியே மீண்டும் பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும் வெளிநாட்டினர் குடியேறுவது அதிகரிப்பு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்களிடம் அதிருப்தியும் நிலவுகிறது.
வரும் 11-ம் தேதி நடைபெறும் சிங்கப்பூரின் 13-வது நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 24 லட்சத்து 60 ஆயிரம் வாக்காளர்கள் வாக்க ளிக்கத் தகுதி பெற்றுள்ளனர். சிங்கப்பூர் 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளை யில் இத்தேர்தல் நடைபெறுகிறது.