உலகம்

கல்வானில் தாக்குதல் நடத்த சீன ராணுவம் உத்தரவிட்டுள்ளது: அமெரிக்க உளவுத்துறை அதிர்ச்சித் தகவல்

செய்திப்பிரிவு

கிழக்கு லடாக் பகுதியில் கல்வான் நதி பள்ளத்தாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சீனா உத்தரவிட்டது என்றுஅமெரிக்க உளவுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த மே 22-ம் தேதி பாங்கோங்டிசோ, கல்வான் பள்ளத்தாக்கு ஆகிய பகுதிகளில் இந்தியா அத்துமீறியதாக கூறி சீனா உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் (எல்ஏசி) ராணுவத்தை குவித்தது. அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவ வீரர்களை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.

கடந்த15-ம் தேதி இரவு இந்திய -சீன ராணுவ வீரர்களுக்குள் மோதல்ஏற்பட்டது. இதில், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 வீரர்கள் காயம் அடைந்தனர். இது மிகப்பெரிய அதிர்ச்சியையும், எல்லையில் போர்ப் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமெரிக்க உளவுத் துறை தரப்பில் கூறப்படுவதாவது:

சீனாவின் மேற்கு மண்டல கமாண்ட் பிரிவைச் சேர்ந்த ஜெனரல் ஜாவோ ஜாங்கி உள்ளிட்டோர் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவப் படையில் (பிஎல்ஏ) பணியாற்றுகின்றனர். ஜெனரல் ஜாவோ ஜாங்கிதான், இந்தியப் படைகள் மீது சீன ராணுவம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

எல்லையில் இந்தியாவுடனான முரண்பாடுகளை மேற்பார்வையிட்ட ஜெனரல் ஜாவோ, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடானஇந்தியா போன்ற நாடுகளுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்றும்,அந்நாடுகள் சீனாவை பலவீனமாக கருதிவிடக் கூடாது எனவும் கூறி,இந்தத் தாக்குதலுக்கு உத்தரவிட்டார். இதுவே இருநாடுகளிடையே மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

இது இரு நாட்டுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை என்பதைவிட கட்டுப்பாடுகளை மீறிய நிலை இது. இந்தியாவுக்கு பெய்ஜிங் வலுவான எச்சரிக்கை விடுக்கும்வகையில் இந்த தாக்குதல் நடைபெற்றது. மேலும் இது இந்தியாவின் சீற்றத்தை தூண்டியதால் சீனா அதன் அடுத்தடுத்த திட்டத்தில் இருந்து பின் வாங்கியது. பேச்சுவார்த்தைகளின் போது இந்தியாவை பணிய வைக்க முடியும் என்பதால், இந்த முயற்சியில் சீனா இறங்கியது.

இவ்வாறு அமெரிக்க உளவுத் துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT