ஆஸ்திரேலியாவின் 29-வது பிரதமராக, முன்னாள் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் மால்கம் டர்ன்புல் (60) நேற்று பதவியேற்றார்.
தலைநகர் கான்பெராவில், அரசு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் அவருக்கு கவர்னல் ஜெனரல் பீட்டர் காஸ்குரோவ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அவரது மனைவி, கட்சியின் துணைத் தலைவர் ஜூலி பிஷப் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த டோனி அபோட் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றத் தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லிபரல் கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற உட்கட்சி ஓட்டெடுப்பில் டோனி அ்போட்டுக்கு 44 வாக்குகளும் அவரை விமர்சித்து வந்த டர்ன்புல்லுக்கு 54 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து டோனி அபோட் பதவி விலகியதால் டர்ன்புல் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
பதவியேற்ற பின் டர்ன்புல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது அரசு அனைத்து தரப்பிலும் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கும். நாடாளுமன்றம் அதன் பதவிக்காலம் முழுவதும் நீடிக்கும். இடைத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை. ஆஸ்திரேலியாவுக்கு பொருளாதார தொலைநோக்கு வேண்டும்.” என்றார்.
முன்னாள் பிரதமர் டோனி அப்பாட் பின்பற்றிய பல்வேறு கொள்கைகள் தொடர்ந்து பின்பற்றப்படும் என்றும் டர்ன்புல் கூறினார். “அபோட் அரசு செய்து கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் அவரது அரசின் வெற்றிக்கு ஓர் உதாரணம். அப்பாட் கடைபிடித்த எல்லை பாதுகாப்பு கொள்கை பாராட்டுக்குரியது. இதன் மூலம் சிரியா, இராக் அகதிகள் 12,000 பேருக்கு இங்கு அடைக்கலம் தரப்பட்டுள்ளது” என்றார் டர்ன்புல்.