கோப்புப்படம் 
உலகம்

ஹஜ் புனிதப் பயணம் ரத்து இல்லை; வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதியில்லை: சவுதி அரேபியா அறிவிப்பு

பிடிஐ

ஹஜ் புனிதப் பயணம் இந்த ஆண்டு ரத்து இல்லை, அதேசமயம், வெளிநாடுகளில் இருந்து எந்தவிதமான பயணிகளும் அனுமதிக்கப்படமாட்டார்கள், உள்நாட்டைச் சேர்ந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருப்பவர்கள் மட்டுமே குறைந்த அளவில் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது

கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டினர் மட்டுமன்றி சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர்களும், உம்ரா புனிதப் பயணம் மேற்கொள்வதற்குத் தடை விதித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டது.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 6 வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் மெக்காவிலும் மதீனாவிலும் புனிதப் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஹஜ் புனிதப் பயணம் செல்லத் தயாராக இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சவுதி அரேபியாவில் இதுவரை கரோனாவுக்கு 1,307 பேர் உயிரிழந்துள்ளனர். 1.60 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் கடந்த 3 மாதங்களாக மெக்கா, காபா மசூதிகளில் தொழுகை நடத்த யாரும் அனுமதிக்கப்படவில்லை, ஹஜ் புனிதப் பயணம் செல்லவும் எந்த வெளிநாட்டினருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கான அமைச்சகம் நேற்று ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் “ இந்த ஆண்டு ஹஜ் புனிதப்பயணம் ரத்து செய்யப்படவில்லை. அதேசமயம், வெளிநாடுகளைச் சேர்ந்த எந்த பயணிகளுக்கும் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

உள்நாட்டில் இருக்கும் சவுதி மக்கள், ஹஜ்புனிதப் பயணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து உள்நாட்டில் தங்கி இருக்கும் மக்கள் ஆகியோர் மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவார்கள்.

ஹஜ் புனிதப் பயணம் பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளப் பட வேண்டும், மக்களின் உடல்நலம் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இது எடுக்கப்பட்டுள்ளது. தொழுகைக்கு வரும் மக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைபிடித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு இஸ்லாம் போதிக்கும் மனிதநேயத்தை கடைபிடிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

வெளிநாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படாது எனத் தெரிவித்துள்ள சவுதி அரேபிய அரசு உள்நாட்டைச் சேர்ந்த மக்கள், உள்நாட்டில் ஹஜ் புனிதப்பயணத்துக்காக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களில் எத்தனை பேரை அனுமதிக்கப்போகிறார்கள் என்பது குறித்த தகவல் இல்லை.

கடந்த 90 ஆண்டுகளில் சவுதி அரேபியாவில் இதுவரை ஹஜ் புனிதப் பயணம் ரத்து செய்யப்பட்டதில்லை. ஆனால் முதல்முறையாக இந்த முறை ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம், கவலை இஸ்லாமிய மக்கள் மனதில் எழுந்து வந்த நிலையில் அதை தெளிவுபடுத்தி, ஹஜ்பயணம் ரத்து இல்லை, வெளிநாட்டினருக்கு மட்டுமே தடை என சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.

ஆண்டு தோறும் நடக்கும் ஹஜ் புனிதப் பயணத்தில் உலகம் முழுவதிலிருந்தும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் மெக்கா, மெதினாவில் குவிவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு 1,200 கோடி டாலர் வருமானம் சவுதி அரேபிய அரசுக்கு கிடைக்கும். ஆனால், இந்த முறை அந்த வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

கரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து சவுதி அரேபியாவுக்கு எந்தவிதமான சர்வதேச விமானங்களும் இயக்கப்படவில்லை. இந்தோனேசியா, மலேசியா நாட்டு மக்களும் சவுதி அரேபியா வரத் தடை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT