2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர், 300க்கும் அதிகமானோர் காயமடைந்தனர், இந்தத் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி தஹவூர் ராணாவை ஜாமீனில் விடுவதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில், “ராணாவை ஜாமீனில் விட்டால் இந்திய-அமெரிக்க உறவில் பாதிப்பு ஏற்படும்’ என்று அமெரிக்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அந்த மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிகொடுத்ததாக கனடாவைச் சேர்ந்த, பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட தஹவூர் ராணா மீது குற்றச்சாட்டப்பட்டது. லஷ்கர் உட்பட பல தீவிரவாத அமைப்புகளுக்கு சதித்திட்டம் தீட்டிக் கொடுப்பவர் என்று அமெரிக்க உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் ஏற்கெனவே ஒரு வழக்கில் இவர் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பை தாக்குதல் தொடர்பாக ராணாவை நாடுகடத்தும் படி இந்தியா ஏற்கெனவே அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்திருந்தது.
இருநாடுகளுக்கிடையே கைதிகளை ஒப்படைக்கும் உடன்படிக்கையின் படி ராணா கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் உடனே ஜாமீன் கோரி மனு செய்தார்.
இது தொடர்பாக லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற போது, மும்பை தாக்குதல் வழக்கில் ராணாவுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது, இந்தியாவும் அவரை ஒப்படைக்கும்படி கோரிக்கை விடுத்தது. அதன்படியே ராணாவைக் கைது செய்துள்ளோம்.
ஜாமீன் வழங்கினால் அவர் கனடாவுக்குத் தப்பிச் செல்வார். அதனால் இந்தியாவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். இந்திய-அமெரிக்க உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. வழக்கு ஜூன் 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.