உலகம்

கரோனா தொற்று குறைந்தது: அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திய ஜப்பான்

செய்திப்பிரிவு

பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வரும் நோக்கில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் பொருட்டு விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளையும் ஜப்பான் நீக்கியுள்ளது.

ஜப்பானில் கரோனா வைரஸ் தொற்று அதிகமாகியிருந்த சூழலில் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர பிற உலக நாடுகளைப் போல ஜப்பானும் ஊரடங்கைக் கொண்டுவந்தது. இந்த நிலையில் ஜப்பானில் கரோனா தொற்று மே மாதம் குறைந்தது.

இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக சரிந்த பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையில் ஜப்பான் அரசு இறங்கியுள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் விதிகக்ப்பட்ட அனைத்து ஊரடங்குத் தடைகளையும் ஜப்பான் அரசு விலக்குவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே வியாழக்கிழமை இரவு கூறும்போது, “ஜப்பானில் பொருளாதார நடவடிக்கைகளை மீட்க முயற்சி செய்கிறோம். உள்நாட்டில் அனைத்துத் தளர்வுகளும் நீக்கப்பட்டுள்ளன. வெளியே செல்லும் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

1964 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பான் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. மே மாதத்தில் வெறும் 1, 700 பயணிகள் மட்டுமே ஜப்பானுக்குச் சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். எனவே சுற்றுலாவை மீட்கும் முயற்சியில் ஜப்பான் இறங்கியுள்ளது.

முன்னதாக, ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் ஜப்பானில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் 6 முக்கியப் பிராந்தியங்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அடுத்த சில நாட்களில் ஊரடங்குக் கட்டுப்பாடு நாடு முழுவதும் விரிவாக்கப்பட்டது.

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தொழில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியும்படி அறிவுறுத்தப்பட்டனர். ஊரடங்குக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு தொற்று எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில் ஜப்பான் அதன் தனித்துவமான வழிமுறைகளைக் கொண்டு கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தியுள்ளது.

ஜப்பானில் கரோனா வைரஸுக்கு 17,668 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில்15,930 பேர் குணமடைந்த நிலையில், 935 பேர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT