ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இரு மாதங்களுக்குப் பிறகு மியூசியம் மற்றும் உணவு விடுதிகள் ஆகியவை திறக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ கரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு இரு மாதமாக ரஷ்யாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ள மாஸ்கோவில் ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமலாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மியூசியம் மற்றும் உணவு விடுதிகள், சரணலாயங்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளன
ரஷ்யாவில் கரோனாவுக்கு 5,45,458 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,284 பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் ரஷ்யா உள்ளது. இந்த நிலையில் கரோனா இறப்பு எண்ணிக்கை ரஷ்யாவில் குறைவாக உள்ளதைத் தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
உலக சுகாதார அமைப்பின் இந்தக் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபடாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
பொதுவெளிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மட்டுமே தற்போது வரை கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஆலோசனையாக வழங்கப்பட்டு வருகிறது.