ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி 
உலகம்

ஈரானில் கரோனா பாதிப்பு 1,92,439 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ஈரானில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,92,439 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அலட்சியம் செய்யாமல் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்தியக் கிழக்கு நாடுகளான ஈரான் மற்றும் சவுதி அரேபியாவில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் ஈரானின் தென் பகுதிகளில் சமீப நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஈரானில் கரோனா பாதிப்பு குறித்து ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில், “ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 2,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,439 ஆக அதிகரித்துள்ளது. 9,065 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 1,52,675 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அலட்சியம் செய்யாமல் மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், மசூதிகளில் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஈரானில் ஐந்தில் ஒருவருக்குக் கரோனா தொற்று இருக்கக்கூடும் என்று அந்நாட்டில் கரோனா தடுப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட பணிக்குழு உறுப்பினர் எஹ்சன் மோஸ்டபாவி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஈரானில் மார்ச் மாதத்தில் கரோனா பரவல் உச்சம் அடைந்தது. அதே காலகட்டத்தில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஆனால், ஈரானில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

SCROLL FOR NEXT