கரோனா வைரஸ் பிரான்ஸின் பலவீனம் மற்றும் குறைபாட்டைக் காட்டியுள்ளது என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில் டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் கடந்த ஆறு மாதமாக உலக நாடுகளின் செயல்பாடுகளை முடக்கியுள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா தொற்று காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, தெற்காசிய நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன.
இந்த நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மெதுவாக மீண்டு வரும் பிரான்ஸ் ஊரடங்கை நீக்கி அதன் வழக்கமான செயல்பாடுகளுக்குத் திரும்பியுள்ளது. மேலும் திங்கட்கிழமை முதல் உணவு விடுதிகளும் அங்கு திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிரான்ஸின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்து அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்.
அதில் மக்ரோன் கூறும்போது, “கரோனா வைரஸ் பிரான்ஸின் பலவீனம் மற்றும் குறைபாடுகளைக் காட்டியுள்ளது. நாம் மீண்டும் வலுவான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். நாம் பிற நாடுகளைச் சார்ந்து இருக்காமல் இருக்க உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளை அதிகம் சார்ந்திருக்கக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளைப் போல கரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸும் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. தற்போது பொருளாதாரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸில் 1,57,220 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,407 பேர் பலியாகி உள்ளனர்.