உலகம் முழுவதும் சுமார் 78,93,700 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைகழகமான ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட தகவலில், “கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 78,93,700 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,32,922 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர
கரோனா பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் சுமார் 20,93,508 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,15,732 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 8,67,624 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலை அடுத்து ரஷ்யாவில் 5,28,267 பேரும், இந்தியாவில் 3,20,922 பேரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகம் முழுவதும் சுமார் 41,28,318 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.
தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.