மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்தால் கரோனா வைரஸைத் தடுக்கும் கட்டுப்பாடுகளை மீண்டும் அமல்படுத்த நேரிடும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 2,410 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,84,955 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8,730 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
ஈரானில் ஊரடங்குக் கட்டுபாடுகளை நீக்கியபின் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சுகாதார விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வலியுறுத்தியுள்ளார். மேலும், மசூதிகளில் கூட்டமாகத் தொழுகையில் ஈபடுவது குறித்தும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “ஈரான் மக்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். மக்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் ஐந்தில் ஒருவருக்குக் கரோனா தொற்று இருக்கக்கூடும் என்று அந்நாட்டில் கரோனா தடுப்பு தொடர்பாக உருவாக்கப்பட்ட பணிக்குழு உறுப்பினர் எஹ்சன் மோஸ்டபாவி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஈரானில் மார்ச் மாதத்தில் கரோனா பரவல் உச்சம் அடைந்தது. அதே காலகட்டத்தில் கடும் பாதிப்பை எதிர்கொண்ட ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் தொற்று எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது. ஆனால், ஈரானில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.