உலகம்

மீண்டும் கரோனா: போர்க்கால அவசர நிலை நடவடிக்கையில் பெய்ஜிங்

செய்திப்பிரிவு

சீனாவின் பெய்ஜிங் நகரில் கரோனா பரவல் மீண்டும் தொடங்கிய நிலையில், அங்கு போர்க்கால அவசர நிலையை அரசு அமல்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள், “பெய்ஜிங்கில் உள்ள முக்கியச் சந்தை ஒன்றில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பெய்ஜிங்கின் ஸின்பாடி சந்தையைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் போர்க்கால அவசர நிலையை அரசு அமல்படுத்தியுள்ளது. இப்பகுதியில் கரோனா பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட 517 பேரில் 45 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட எவருக்கும் கரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஸின்பாடி சந்தைக்குச் சென்ற பலருக்குக் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் விளையாட்டு நிகழ்வுகள், சுற்றுலா ஆகியவை தற்காலிகமாகத் தடை செய்யப்படுவதாக பெய்ஜிங் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகரில் உள்ள சந்தை ஒன்றிலிருந்து பரவியது. இதனைத் தொடர்ந்து சீனாவில் இதுவரை 83,064 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 78,365 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கடந்த மாதம்தான் சீனாவில் கரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் தொடங்கியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SCROLL FOR NEXT