உலகம்

கடந்த காலங்களில் நாம் திருத்தம் செய்ய முடியாது; சர்ச்சிலின் சிலை தாக்கப்பட்டது வெட்கக்கேடானது: போரிஸ் ஜான்சன்

செய்திப்பிரிவு

இங்கிலாந்து முன்னாள் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சிலின் சிலை நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் தாக்கப்பட்டது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமல்லாது பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடந்த போராட்டத்தில் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் சிலை தாக்கப்பட்டது.

இந்த நிலையில், வின்ஸ்டன் சர்ச்சில் சிலை தாக்கப்பட்டது வெட்கக்கேடான செயல் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறும்போது, “தேசிய நினைவுச் சின்னம் போராட்டக்காரர்களால் தாக்குதலுக்கு உண்டானது அபத்தமானது, வெட்கக்கேடானது. ஆம்! சில நேரம் வின்ஸ்டன் சர்ச்சில் கூறிய கருத்துகள் இன்றைய நாளில் நாம் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு ஹீரோ. அவர் இந்த நினைவுச் சின்னத்துக்குத் தகுதி ஆனவர். நாம் நமது கடந்த காலங்களில் திருத்தம் செய்ய முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT