பிரேசிலில் கரோனா தொற்று ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில், பெரும் வேலை இழப்புகளை அந்நாடு சந்தித்து வருகிறது.
கரோனா தொற்றின் புதிய மையமாக பிரேசில் மாறியுள்ளது. நாளுக்கு நாள் நோய்த் தொற்றின் எண்ணிக்கையும், இறப்பும் அதிகரித்து வருகின்றன. இதுவரை பிரேசிலில் சுமார் 7,42,084 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38,497 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக பிரேசிலில் பெரும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரேசிலில் முக்கிய வணிகப் பகுதியான ரியோ டி ஜெனிராவில் ஆயிரக்கணக்கான உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் நிரந்தரமாக மூடும் நிலைக்குச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக மோசமான வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிலாளர் நலவாரிய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பிரேசிலில் கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை மறைக்கும் விதமாக முன்னுக்குப் பின் முரணாக அரசு இணையதளத்தில் பிரேசில் அரசு பதிவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சமீபத்தில் எழுந்தது.
முன்னதாக, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கரோனா வைரஸைத் தடுக்கும் முயற்சிகளில் தோல்வி அடைந்துவிட்டார் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த சூழலில் பிரேசில் பொருளாதார இழப்பையும், வேலை இழப்பையும் சந்தித்துள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.