ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் ஜாஜான் மாகாணத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் அதிகாலையில் தாக்குதல் நடத்தியதில் 10 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இதுகுறித்து மாகாண காவல் துறை துணைத் தலைவர் அப்துல் ஹபிஸ் காஷி கூறும்போது, “துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் குஷ் தெபா மாவட்டத்தில் உள்ள ஒரு சோதனைச் சாவடிக்கு சென்றுள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த ராணுவ வீரரான முகமது ஆலிம் அவர்களை உள்ளே அனுமதித்துள்ளார். உள்ள சென்ற தீவிரவாதிகள் 10 வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர்” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆப்கன் ராணுவம் அல்லது காவல் துறையில் உள்ளவர்களே தாக்குதலில் ஈடுபடும் இதுபோன்ற சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது அந்நாட்டு அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.