காலாபானி பகுதி குறித்த இந்தியாவின் கோரல்கள் தவறான தரவுகளின் அடிப்படையில் அமைந்ததாகும் என்று கூறிய நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இதைப்பற்றியெல்லாம் வாயைத் திறக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
புதனன்று பிரதிநிதிகள் சபையில் நேபாள் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி கூறும்போது, “உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்ஜி நேபாளம் பற்றி சிலவற்றைத் தெரிவித்தார். அவரது கருத்துக்கள் நியாயமற்றவை முறையற்றவை. மத்திய அரசில் பொறுப்புள்ள பதவியிலிருக்கும் யாராவது அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள், அவருக்கு சம்பந்தமில்லாத பகுதியில் நுழைந்து கருத்துக்கள் கூறுவது முறையல்ல என்று எடுத்துரையுங்கள். நேபாளத்தை மிரட்டும் பேச்சு நிச்சயம் கண்டிக்கப்படும்” என்றார்.
யோகி ஆதித்யநாத் காலாபானி பகுதி குறித்து கடந்த வாரம் கூறும்போது, “அரசியல் எல்லையை நிர்ணயிக்கும் முன்னர் நேபாள் விளைவுகளை சிந்தித்துப் பார்த்து செய்ய வேண்டும். திபெத்துக்கு என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது நலம்” என்று கூறியதற்குத்தான் நேபாள் பிரதமர் தற்போது பதிலளித்துள்ளார்.
இந்நிலையில் நேபாளப் பிரதமர் மேலும் கூறும்போது, “இந்தியா பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க எண்ணினால் தீர்வு கிடைக்கும். 1961, 62 முதல் இந்தியா தங்கள் ராணுவத்தை காலாபானியில் நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் அந்தப் பகுதி எங்களுடையது. செயற்கையான காளி நதியைக் காட்டி இந்தியா அந்த இடத்துக்கு உரிமை கோருகிறது. அவர்கள் காளி கோயில் ஒன்றையும் அங்கு கட்டியிருக்கிறார்கள். எங்களுடைய உரிமை கோரல் வரலாற்று ஆவணங்களையும் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டது” என்கிறார் நேபாளப் பிரதமர்.