உலகம்

உய்குர் முஸ்லிம்கள் விவகாரம்: சீன அதிகாரிகள் மீது தடை விதிக்கத் தயாராகும் அமெரிக்கா?

செய்திப்பிரிவு

உய்குர் முஸ்லிம்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணமான சீன அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கக் கோரும் மசோதாவில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

சீனாவில் சின்ஜியாங் மாகாணத்தில் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற முஸ்லிம் குழுக்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் காரணமானவர்கள் மீது தடை விதிப்பதற்கான மசோதா கடந்த மாதம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அதில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. மேலும் உய்குர் முஸ்லிம்களிடம் தவறாக நடந்துகொள்வதாக எழுந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சென் குவாங்குவோ, உய்குர் முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு முக்கியக் காரணமானவர் என்று அமெரிக்க மசோதாவில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சுமார் 10 லட்சம் உய்குர் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை முஸ்லிம் பிரிவினர் முகாம்களில் அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக கசிந்த சீன அரசு ஆவணங்களை வைத்து, 'தி நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கடந்த ஆண்டு இறுதியில் செய்தி வெளியிட்டிருந்தது.

சமீபகாலமாக கரோனா தொற்று தொடர்பாகவும், ஹாங்காக் விவகாரம் தொடர்பாகவும் அமெரிக்காவும் சீனாவுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

SCROLL FOR NEXT