ஆப்பிரிக்காவில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,80,000 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிரிக்காவின் நோய் தடுப்பு மையம் , “ 54 ஆப்பிரிக்க நாடுகளில் கரோன தொற்று பரவலாக பரவி வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் கரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,83,474 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 5,000க்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பின்னோக்கி இழுந்துள்ளது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோனது. மேலும், பலர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் ஆப்பிரிக்காவில் கொடுமையான வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை முன்னரே தெரிவித்திருந்தது. எனினும் கரோனா பரவலை தடுக்க ஆப்பிரிக்க நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், தென் அமெரிக்க நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.