அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் கடும் பலி எண்ணிக்கை பாதிப்பு எண்ணிக்கையிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் கரோனாவுக்குள் சென்று கொண்டிருக்கின்றன.
கரோனா பாதிப்புகளில் 2ம் இடத்தில் இருக்கும் பிரேசில் பலி எண்ணிக்கை 36.044 ஆக அதிகரித்துள்ளது. மொத்த கேஸ்களின் எண்ணிக்கை 676,494 என்று உள்ளது.
இந்நிலையில் மக்களிடமிருந்து கரோனா பலி, பாதிப்பு எண்ணிக்கை விவரங்களை மறைக்க துணிந்துள்ளது பிரேசில் அரசு.
தரவு, பாதிப்பு எண்ணிக்கைகளை வெளியிட்டு வந்த இணையதளம் தரவுகளை மறைக்கத் தொடங்கியுள்ளது.. அதே போல் உறுதி செய்யப்பட்ட மொத்த கரோனா எண்ணிக்கையையும் மறைக்கத் தொடங்கியது பிரேசில் அரசு.
அந்நாட்டு அதிபர் ஜைர் போல்சனாரோ முதலிலிருந்தே கரோனா பாதிப்பு ஆபத்து பற்றி எதுவும் தெரியாமல் பிதற்றிக் கொண்டிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
covid.saude.gov.br இணையதளத்திலிருந்து தரவுகள் நீக்கப்பட்டதற்கு அந்த நாட்டு சுகாதார அமைச்சகமும், அதிபர் போல்சனாரோவும் எந்த வித விளக்கமும் அளிக்கவில்லை. தரவுப்பக்கங்கள் நீக்கப்பட்டு வேறு தரவுகள் காட்டப்படுகின்றன.
சீனா விஷயங்களை மறைத்ததாக உலகமே அதை கண்டபடி ஏசி வரும் நிலையில் வலது சாரி அரசான பிரேசில் அரசு தரவுகளை மறைப்பதை உலக நாடுகள் எப்படி பார்க்கும் என்பது ஆர்வமூட்டக்கூடியதுதான்.
ஏனெனில் கரோனா ஒழிப்பில் அதன் வெளிப்படைத்தன்மை முக்கியப் பங்கு வகிப்பதாக உலகத் தலைவர்கள் சீனாவை விமர்சிக்கும் போது கூறினர் இப்போது என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் என்று பிரேசிலில் சில செய்தியாளர்கள் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.