ஆப்கானிஸ்தானில் கரோனா எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகிற நிலையில் மருத்துவமனைகளில் படுக்கை வசதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் புதிதாகத் தொற்றுக்கு உள்ளாகும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க முடியாத நிலையை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் அஹ்மத் ஜவாத் உஸ்மானி கூறும்போது, ''மருத்துவமனையில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டன. இனி புதிதாகத் தொற்றுக்கு ஆளானவர்களைக் கவனித்துக் கொள்ள போதிய வசதிகள் இல்லை'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இதுகுறித்து காபூல் ஆளுநர் முகம்மது யாகூப் ஹைதரி கூறும்போது, “காபூலில் மட்டும் லட்சக்கணக்கானோர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம். தினமும் சந்தேகத்துக்குரிய மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. மக்கள் தகவல் தெரிவிக்காமல் இறந்த உடல்களை இரவில் அடக்கம் செய்கின்றனர். தினமும் 15 ஆம்புலன்ஸ்களில் இறந்த உடல்கள் கொண்டு செல்லப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் 761 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதுவரையில் 327 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் போதிய மருத்துவக் கட்டமைப்பு இல்லாத காரணத்தினால் கரோனா தொற்றை எதிர்கொள்வதில் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. எதிர்பார்த்ததை விட தொற்று எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கரோனா தொற்று மிக அதிகம் ஏற்பட்டுள்ளது.