அமெரிக்கப் பங்குச் சந்தையிலிருந்து சீன நிறுவனங்களை பின்வாங்குமாறு கட்டாயப்படுத்துவது அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பைத் தரும் என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனா நிறுவனங்கள் அதன் கணக்கு நடைமுறைகளில் குளறுபடி செய்கின்றன. அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்து இருந்தார்.
2019-ல் அமெரிக்கப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட சீன நிறுவனமான லக்இன் காஃபி நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி மற்றும் சில ஊழியர்கள் அதன் விற்பனை ஒப்பந்தம் தொடர்பாக் பொய்யான தகவலை அளித்திருப்பது சமீபத்தில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்தே பங்கு சந்தையில் பட்டியலிடுவதற்கான விதிமுறைகள் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. அத்தகைய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலாகுவதை தடுக்கும் வகையில் உருவாக்கப்படும் கடுமையான விதிமுறைகள் வேண்டும். அது பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் மைக் பாம்பியோ கூயிருந்தார்.
இந்நிலையில் அவருடைய கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங், ”அமெரிக்க சீன நிறுவனங்களின் கணக்கு நடைமுறைகளை பொதுமைப்படுத்துகிறது. சீன நிறுவனங்களை அமெரிக்கா அதன் பங்குச் சந்தையிலிருந்து பின்வாங்குமாறு கட்டாயப்படுத்தினால் அமெரிக்காவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்” என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்த ரீதியான மோதல் கடந்த இரண்டு வருடங்களாக தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டில் சீனப் பொருட்கள் மீது அமெரிக்காவும் அமெரிக்க பொருட்களும் சீனாவும் பல முறை வரி விகிதத்தை உயர்த்தின. கரோனாப் பரவலுக்கு சீனாதான் காரணம் என்றும் கரோனா தொடர்பாக பல தகவலை மறைக்கிறது என்று அமெரிக்க குற்றம்சாட்டியது. தற்போது ஹாங்காக் விவகாரத்தில் சீனா அமெரிக்கா இடையே மோதல் மேலும் அதிகரித்து இருக்கிறது.