பிரான்ஸில் கரோனா கட்டுக்குள் வந்துள்ளதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அரசின் அறிவியல் ஆலோசனைக் குழு இன்று (வெள்ளிக்கிழமை) கூறும்போது, “வைரஸ் இன்னும் சில மாகாணங்களில் பரவிக் கொண்டு இருக்கிறது. ஆனால், அதன் வேகம் குறைந்துள்ளது. கரோனா தற்போது பிரான்ஸின் கட்டுக்குள் உள்ளது. தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒரு நாளைக்கு 1000 பேருக்கு தொற்று என்ற அளவில் தொற்று குறைந்துள்ளது” என்றார்.
பிரான்ஸில் இரண்டு மாதமாக நிலவிய கரோனா தொற்று பாதிப்பு கடந்த நான்கு வாரமாகக் குறைந்துள்ளது. கரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
தொற்று குறைந்த நிலையில் பிரான்ஸில் சுமார் 8 வாரம் ஊரடங்கு நிலவியது. இந்த நிலையில் கடந்த மாதம் தளர்த்தப்பட்டது. பிரான்ஸில் கரோனா தொற்றால் 1,52,444 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,065 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தென் அமெரிக்கா, தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 67,03,095 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3,93,224 பேர் பலியாகியுள்ளனர். 32,52,378 பேர் குணமடைந்துள்ளனர்.