உலகம்

ரஷ்யாவில் கரோனா தொற்று 4,32,277 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4, 32,277 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8, 536 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தொற்று எண்ணிக்கை 4,32,277 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 178 பேர் நேற்று மட்டும் பலியானதைத் தொடர்ந்து அங்கு பலி எண்ணிக்கை 5,215 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் ரஷ்யா தொடர்ந்து மூன்றாம் இடத்தில் உள்ளது, அமெரிக்கா, பிரேசில் முறையே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

பிரான்ஸ் ஜெர்மனி, ஸ்பெயின், போர்சுக்கல், உள்ளிட்ட நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மார்ச் மாதத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்தது, மே மாதத்தில் அங்கு தொற்று தீவிரம் குறைந்தது. ஆனால் கிழக்கு ஐரோப்பா நாடான ரஷ்யாவில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கரோனாவுக்குப் புதிய சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளது என்றும் விரைவில் சவுதி அரேபியாவுடன் இணைந்து சோதனையில் ஈடுபட உள்ளதாகவும் ரஷ்யா சமீபத்தி தெரிவித்தது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

SCROLL FOR NEXT