கரோனா தொடர்பான தகவல்களை உலக சுகாதார அமைப்புக்கு வழங்குவதில் சீனா தாமதம் செய்தது என்று வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது என்று சீன வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட ‘அசோஸியட் பிரஸ்’ என்ற செய்தி நிறுவனம், கரோனா வைரஸ் தொடர்பான தகவல்களைப் பகிர்வதில் சீனா செய்த கால தாமதத்தால் உலக சுகாதார அமைப்பு எரிச்சலடைந்தாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், அந்தச் செய்தியை ஜாவோ லிஜியன் மறுத்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூகான் நகரில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்து. சில வாரங்களில் பிற நாடுகளில் கரோனா தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கரோனா வைரஸை சீனா வைரஸ் என்று கூறினார்.
வூஹான் மருந்து ஆய்வு மையத்தில் இருந்து கரோனா வைரஸ் பரவியதாக அவர் குற்றம் சாட்டினார். தவிர கரோனா வைரஸ் பரவல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அமெரிக்க குழுவை வூகானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று டிர்ம்ப கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்க சீனா மறுத்தது.
கரோனா தொடர்பாக எந்தத் தகவலையும் மறைக்கவில்லை என்றும், உரிய நேரத்தில் அனைத்து தகவல்களையும் முறையாக வழங்கி வந்தகாவும் சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.