உலகம்

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலக முழுவதும் உள்ள கருப்பின மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது: கானா அதிபர்

செய்திப்பிரிவு

ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணம் உலகம் முழுவதும் உள்ள கருப்பின மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று கானா அதிபர் அகுபோ - அடோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கானா அதிபர் அகுபோ - அடோ கூறும்போது, “ அமெரிக்காவில் போலீஸாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மரணம் உலகம் முழுவதும் உள்ள அனைத்து கருப்பின மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.மோசமான பக்கத்தை நினைவுப்படுத்தியுள்ளது. இது சரியானது அல்ல.

அமெரிக்காவில் உள்ள எங்கள் உறவுகளின் கடினமான நேரத்தில் நாங்கள் துணை நிற்போம். கானா மக்களின் சார்பாக ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.

மினியாபோலீஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் பரவி பல போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கலவரம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT