அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள் குறித்தும் ட்ரம்ப்பை பிரிட்டன் அரசு கண்டிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது என்று ஜெர்மி கோர்பின் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்காக அதிபர் ட்ரம்ப் சர்வதேச அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
இந்த நிலையில் பிரிட்டன் தொழிலாளர் கட்சியின் தலைவராக இருந்தவரும், எம்பியுமான ஜெர்மி கோர்பின் ட்ரம்பை விமர்சிக்காத பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஜெர்மி கோர்பின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரிட்டன் அரசு விமர்சிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. சமவுரிமை மற்றும் நியாத்திற்காக பேச வேண்டிய தருணம் இது” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணச் செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை கிளப்பியுள்ளது.
ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தொடரும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் மாறியுள்ளது.
மினியாபோலீஸில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், நியூயார்க், துல்சா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களிலும் பரவி பல போலீஸ் வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் கலவரம் தொடர்கிறது. போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.