உலகம்

ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம்: வன்முறைகளுக்கு ஒபாமா கண்டனம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிராக சில போராட்டக்காரர்களின் வன்முறை செயல்களுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் போரட்டக்காரர்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அரசியல் சார்ந்த தீர்வுகளையும் அவர் கோரியுள்ளார்.

அமெரிக்காவில் போலீஸ் அதிகாரி ஒருவர், கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு மேலாக தன் பூட்ஸால் மிதித்த காட்சி வைரலானது. இந்நிலையில் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

ஜார்ஜ் ஃபிளாய்ட் போலீஸ் வன்முறைக்குப் பலியானார் என்று வன்முறைகள் ஆங்காங்கே வெடிக்கத் தொடங்கியுள்ளன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் தலைவிரித்தாடும் நிறவெறிகளுக்கு எதிரான போராட்டமாகவும் தற்போது உருவெடுத்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. பல போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் சிலரின் வன்முறைகளுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாரக் ஒபாமா கூறும்போது, “ வன்முறையை மன்னிக்கவோ, அதை அறிவுபூர்வமாக நியாயப்படுத்தவோ அல்லது அதில் பங்கேற்கவோ கூடாது. நமது குற்றவியல் நீதி முறை மற்றும் அமெரிக்க சமுதாயத்தின் உயர்ந்த நெறிமுறைக் குறியீட்டில் செயல்பட வேண்டுமென்றால் அவற்றுக்கு நாமே முன் மாதிரியாக இருக்க வேண்டும். போராட்டத்தின் நோக்கம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அநீதியை வெளிச்சத்துக்கு கொண்டு வர வேண்டும். இதனை நாம் சட்ட ரீதியாகத்தான் அணுக வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT