அமெரிக்காவில் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட கருப்பரின அமெரிக்கர் 49 வயது ஜார்ஜ் பிளாய்ட் பலிக்கு அமெரிக்கா முழுதும் போராட்டங்கள் கொழுந்து விட்டு எரிகின்றன.
வாஷிங்டனில் அதிபர் ட்ரம்ப் இருக்கும் வெள்ளை மாளிகை அருகிலேயும் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள கட்டடங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். சாலையில் நிறுத்தியிருந்த கார்களுக்கு தீவைப்பு நடந்தது.
போராட்டத்தைக் கண்டு அஞ்சிய ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழியில் சிறிது நேரம் பதுங்கியிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மனைவி, மகன் ஆகியோருடன் பதுங்குக் குழியில் இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே போராட்டங்களை சமூக ஊடகங்கள் தூண்டுவதாக ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.
‘ஆன்டிபா’ என்ற குழு இடதுசாரிக் கொள்கை உடையதாகவும் அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் இவர்களே போராட்டங்களைத் தூண்டுவதாகவும் ஆகவே அதை பயங்கரவாத அமைப்பு என்று அறிவிக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “இந்தப் போராட்டங்கள்அமைதிப் போராட்டம் அல்ல. இவை உள்நாட்டு பயங்கரவாதம், அப்பாவி உயிர்களை பலிவாங்குவது, அப்பாவிகளின் ரத்தம் சிந்துவது நியாயமற்றது, இது மனிதகுல விரோதம், கடவுளுக்கு எதிரான குற்றம்.
அப்பாவி மக்களின் சொத்துக்களை சூறையாடுவோர் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்தப் போராட்டங்களை தூண்டிவிடும் ஆன்டிஃபா உள்ளிட்ட அமைப்புகள், நபர்கள் ஜெயிலில் நீண்ட காலம் செலவிட நேரிடும்.
அமெரிக்க மக்களை காப்பாற்றுவதுதான் என் தலையாய கடமை. நம் நாட்டின் சட்டங்களைக் காப்பாற்றவே பதவியேற்றுள்ளேன். இதைத்தான் நான் செய்வேன்” என்றார் ட்ரம்ப்.