உலகம்

ஜி 7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து ரஷ்யா விளக்கம்

செய்திப்பிரிவு

ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவது குறித்து முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்ட பிறகே அம்மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் நடைபெறவிருந்த ஜி7 உச்சிமாநாட்டை செப்டம்பர் வரையில் தள்ளி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த சனிக்கிழமை அறிவித்தார்.

“தற்போது உறுப்பினராக உள்ள நாடுகள் உலக போக்கை பிரதிபலிப்பதாக இல்லை. புதிதாக நாடுகள் கலந்துகொள்ள வேண்டும். எனவே தற்போது ஜி7 மாநாட்டை நடத்த விரும்பவில்லை. செப்டம்பர் வரை அம்மாநாட்டை ஒத்தி வைக்கிறேன்

அம்மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்யா, இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை அழைகிறேன்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியபோது, ”ரஷ்ய பிரதமர் புதின் அனைத்து விதமான உரையாடல்களில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவிப்பவர். ஆனால் ஜி7 மாநாடு தொடர்பாக மேலதிக விவரங்கள் தேவை.

தற்போதைய அழைப்பு குறித்தும் தெளிவான விவரங்கள் தெரியவில்லை. அது அதிகாரப்பூர்வமான அழைப்புதானா என்பது கூட தெரிவில்லை. வரும் மாநாட்டின் நோக்கம் என்ன உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்பட்ட பிறகே அம்மாநாட்டில் கலந்துகொள்வது தொடர்பான முடிவை ரஷ்யா அறிவிக்கும்" என்று தெரிவித்தார்.

ரஷ்யா உக்ரைன் மீது மேற்கொண்ட அத்துமீறலைத் தொடர்ந்து கடந்து 2014 -ம் ஆண்டு பாரக் ஓபாமா அமெரிக்கா அதிபராக பதவி வகித்தபோது ஜி 8 நாடுகளின் பட்டியலிருந்து நீக்கப்பட்டது. ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு ரஷ்யாவை மீண்டும் சேர்த்துக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால் பிற நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் தற்போது மீண்டும் ரஷ்யாவை சேர்த்துக் கொள்ள ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

பொருளாதார அடிப்படையில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஜி7 நாடுகள் என்று அழைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT