உலகம்

தென்கொரியாவில் மீண்டும் தலைதூக்கியது கரோனா: திறந்த பள்ளிகளை இழுத்து மூடியது அரசு

ஆர்.சி.ஜெயந்தன்

கரோனா வைரஸ் தனது ஆக்டோபஸ் கரங்களை உலகம் முழுவதும் அகல விரித்துக்கொண்டே செல்கிறது. இன்றைய நிலவரப்படி இந்தியாவில் கரோனா இறப்புகளின் எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பிரேசில் நாடு தொற்று எண்ணிக்கை அடிப்படையில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 4,65,166 தொற்றுகளுடன் இரண்டாவது இடத்துக்குச் சென்றுவிட்டது. அதேபோல அங்கே 27 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, கரோனாவுக்கு எதிராக கடுமையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அந்நாட்டின் மக்கள் மத்தியில் விமர்சனம் எழுந்துள்ளது.

ஊரடங்கு தளர்வுக்குப் பின்

பிரேசில் நிலவரம் இப்படியிருக்க, கரோனாவை முன்னதாகக் கட்டுப்படுத்திவிட்ட வெகுசில நாடுகளில் சீனாவுக்கு அடுத்த நிலையில் மிகவும் பாராட்டப்பட்ட வந்தது தென்கொரிய தேசம். அங்கே 11,441 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு 269 பேர் மரணித்திருந்தனர். ஆனால், தற்போது அங்கே மீண்டும் கரோனா தலைவலி கிளம்பிவிட்டது. கரோனா தொற்று கட்டுக்குள் வந்து, அங்கே இரட்டை இலக்கங்களிலிருந்து வந்த நிலையில் தென்கொரியாவின் தலைநகர் சியோலில் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் புதிதாக 250 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவருமே கரோனா ஊரடங்கு முடிந்ததும் திறக்கப்பட்ட மதுபான விடுதிகள் மற்றும் நைட் கிளப்புகளுக்குச் சென்று வந்தவர்கள் என தென்கொரியாவின் பொதுச் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கிற்குப் பின் திறக்கப்பட்ட பள்ளிகளை இழுத்து மூடியதுடன், பூங்காக்கள், மால்கள், கிளப்புகள், பார்கள், மியூசியங்கள் ஆகியவற்றையும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவசரமாக மூடி உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சமூக விலகல் நடைமுறைகளைக் கடுமையாக்கவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தப் புதிய தொற்றுகள் ஒருபுறம் இருக்க, அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்துக்கு மாற்றாக பாம் கிம் என்பவரால் தென்கொரியாவில் தொடங்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி கண்டதுடன், ‘தென்கொரியாவின் அமேசான்’ என்று முதலீட்டாளர்களால் பாராட்டப்பட்டு வரும் இணைய வர்த்தக நிறுவனம் கோபாங். தலைநகர் சியோலில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகக் கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இருமல், தும்மல், சளிப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட, தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த 4000 ஊழியர்களில் 3500 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் 69 பேருக்கு உடனடியாக கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த மற்ற அனைத்துத் தொழிலாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தென்கொரிய சுகாதார அமைச்சகம் இதை கரோனாவின் இரண்டாம் அலையா என்பதைக் கூற மறுத்துவிட்டதாக தென்கொரியாவின் செய்தி நிறுவனங்களில் ஒன்றான ‘யோன்ஹாப்’ (Yonhap) கூறியிருக்கிறது.

SCROLL FOR NEXT