இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு மிகுதியாகியுள்ளது.
அதேவேளையில், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாகிஸ்தான் அரசு இன்று இரவு அல்லது நாளை வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்தியாவின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி இம்மாதம் 26-ம் தேதி (திங்கள் கிழமை) பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க வருமாறு, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கன் அதிபர் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் தெற்கு ஆசிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு இந்த நாடுகளுக்கும் இடையே சமீபகாலமாக நடந்து வந்த வெளியுறவு கொள்கை வேறுபாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளால், இந்தத் தலைவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதில் பல்வேறு விதமான அணுகுமுறைகளும் முரணான காரணங்களும் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வரும் 26-ம் தேதி மோடியின் பதிவியேற்பு விழாவில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும், அதேவேளையில் அதுகுறித்த ஆலோசனை நீடித்து வருவதாகவும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள வாய்ப்பு அதிகம் என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறித் தாக்குதல் நடத்துவதும், அதனை எதிர்த்து இந்திய ராணுவம் பதிலடி தருவதுமாய், எல்லையில் அவ்வப்போது பதற்றம் நிலவுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர் பரூக் அளித்த பேட்டி ஒன்றில், "புதிதாக பதவியேற்க உள்ள இந்திய அரசின் இந்த நல்லிக்கணத்துக்கு பாகிஸ்தான் கைமாறு செய்யும்" என கூறியுள்ளார்.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய், வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸினா சார்பில் அந்நாட்டு சபாநாயகர் ஷிரின் ஷர்மின் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.