உலகம்

ரஷ்யாவில் அதிகபட்சமாக ஒரே நாளில் கரோனாவுக்கு 232 பேர் பலி

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 232 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவுக்கு பலி எண்ணிக்கை 4, 374 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ரஷ்யாவில் அதிகபட்சமாக கரோனாவுக்கு ஒரே நாளில் 232 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனாவுக்கு இதுவரை 4,374 பேர் பலியாகினர்.வியாழக்கிழமை மட்டும் சுமார் 8,572 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்திப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யவில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,79,051 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாதமாகவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரு வாரங்களாக ஒவ்வொரு நாளும் 10,000 பேர் வரை ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கரோனாவால் பாதிப்புக்குள்ளான முதல் பத்து நாடுகளில் ரஷ்யா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸால் 17,06,226 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிரேசிலில் 438,812 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ உட்பட பல முக்கிய அமைச்சர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷூஸ்டின் கடந்த மாதம் கரோனா தொற்றுக்கு ஆளானார். பின்னர் குணமடைந்து பணிக்குத் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT