21-ம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக நாம் மாற்றுவோம் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
2 நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்ற மோடி தனது பயணத்தின் 2-வது நாளான நேற்று மஸ்தார் நகரில் அந்நாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியது: உலக வங்கி, சர்வதேச செலாவணி நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்தியாவை மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார வளம்மிக்க நாடு என்றும், அங்கு முதலீடுகளுக்கு சிறப்பான வளர்ச்சி உள்ளது என்றும் சுட்டிக் காட்டியுள்ளன. இந்தியாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய உள்கட்டமைப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறை என பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.
எனவே இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் நாம் அனைவரும் இணைந்து 21-ம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டாக மாற்றிக் காட்டுவோம். இப்போது உலகமே ஆசிய கண்டத்தின் வளர்ச்சியை கவனித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இல்லாமல் எப்படி ஆசியா முழுமை பெற முடியும். ஆசிய கண்டத்தின் மையமே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்தான். இந்தியாவின் திறனும், ஐக்கிய அரசு எமிரேட்ஸின் சக்தியும் இணைந்து ஆசியாவின் முக்கியத்துவத்தை உலகம் உணரச் செய்யலாம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் சில சிக்கல்கள் உள்ளன என்று தெரியவந்துள்ளது. அதற்கான தீர்வுகளை கண்டறியுமாறு வர்த்தக அமைச்சரிடம் கூறியுள்ளேன் என்றார்.
இளவரசருடன் சந்திப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பட்டத்து இளவரசரும், அந்நாட்டின் ராணுவ தலைமை பொறுப்பில் 2-வது இடத்தில் உள்ளவருமான ஷேக் முகமது பின் சையீத் அல் நயானை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார்.
அப்போது இருநாடுகளிடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்து விவாதிக் கப்பட்டது. தீவிரவாதத்தால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் முக்கியமாக ஐஎஸ் தீவிரவாதி களால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் நன்மை அளிப்பதாக இருந்ததாக பின்னர் மோடி தெரிவித்தார். அபுதாபியில் மோடி தங்கியுள்ள எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
முன்னதாக நேற்று முன்தினம் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்தபோது வழக்கமான மரபுக்கு மாறாக பட்டத்து இளவரசர் ஷேக் நயான், பிரதமரை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். அவருடன் 5 இளவரசர்களும் நேரில் வந்து மோடியை வரவேற்றனர்.
அங்கிருந்து ஹோட்டலுக்கு சென்ற மோடி, தனது பயணத்தில் முதல் நிகழ்ச்சியாக ஷேக் சயீத் பெரிய மசூதிக்கு சென்றார். அமீரக அதிகாரிகள் மோடிக்கு மசூதியை சுற்றிக் காண்பித்து அதன் நுண்கலை வேலைப்பாடுகள் குறித்து விவரித்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசர் ஷேக் நயான், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் அன்வர் கர்காஷ் ஆகியோருடன் ஷேக் சயீத் மசூதியில் மோடி செல்பி எடுத்துக் கொண்டார். மோடிக்கு இளவரசர் ஷேக் நயான் இரவு விருந்தளித்தார். மோடிக்காக பிரத்யேகமான சைவ உணவை சிறப்பு சமையல் கலை நிபுணர் சஞ்சீவ் கபூர் தயாரித்தார்.
வெளிநபர் தலையீடு கூடாது
அபுதாபியில் அந்நாட்டு நாளேட்டுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது, “பிராந்திய அல்லது இருதரப்பு பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நாடுகளே பேசி தீர்த்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். வெளிநபர் தலையீட்டால் ஏற்படும் விளைவுகளை நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் இந்தியா நல்லுறவை பேணுகிறது. பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை இந்தியா எப்போதும் கடைபிடிக்கிறது. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதையே இந்தியா தொடர்ந்து ஆதரித்து வருகிறது. ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
இந்திய பணியாளர்களுடன்..
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுமார் 20 லட்சம் இந்தியர்கள் பணி யாற்றுகின்றனர். இதில் 60 சதவீதம் பேர் உயர்நிலை பணி களில் உள்ளனர். தொழில் நக ரமான அபுதாபியில் இந்திய தொழி லாளர்கள் அதிகம் வசிக்கின் றனர். அங்குள்ள கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கத் தில் வைத்து இந்திய தொழிலா ளர்களை மோடி சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இந்தச் சந்திப்பின் போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.
அபுதாபியில் முதல் இந்து கோயிலைக் கட்ட அமீரக அரசு நிலம் ஒதுக்குவதாக ஏற்கெனவே உறுதி செய்துள்ளது. இந்த அறிவிப்புக்கு தனது பயணத்தின்போது மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அபுதாபியில் கோயில் கட்ட நிலம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதற்கு நன்றி. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்” என்று பதிவிட்டுள்ளார்.
சுமார் 34 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இப்போது தான் சென்றுள்ளார்.
மஸ்தார் நகரின் சிறப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புகையில்லாத நகரம் என்ற புகழுக்குரியது மஸ்தார் நகர். அங்குதான் மோடி நேற்று சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பதிவேட்டியில் அறிவியலே வாழ்க்கை என்று எழுதி மோடி கையெழுத்திட்டார்.
அபுதாபியிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் மஸ்தார் நகரம் உள்ளது. இது நவீன முறையில் திட்டமிட்டு வடிமைக்கப்பட்ட நகராகும். இங்கு சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. வாகனங்களும் மின் சக்தி மூலமே இயங்குகின்றன. இங்கு புகைக்கு பெயரளவில் கூட இடம் இல்லை.
இந்த நகரம் குறித்து ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அதிகாரிகளும், ஆய்வாளர்களும் மோடிக்கு விளக்கம் அளித்தனர். பின்னர் நகரை சுற்றிப் பார்த்த மோடி, அங்குள்ள கட்டமைப்புகள் குறித்து தனது சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்.