உலகம்

பாகிஸ்தானில் கரோனா தொற்று 58,278 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 58,278 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58,278 ஆக அதிகரித்துள்ளது. இதில் சிந்து மாகாணத்தில் மட்டும் 23,507 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாகாணத்தில் 20,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலுசிஸ்தானில் 3,468 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லமாபாத்தில் 1,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 18,314 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 1,197 பேர் பலியாகி உள்ளனர்.

பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை பிரதமர் இம்ரான் கான் எடுத்து வருகிறார். ஊரடங்கினால் கடும் பொருளாதார நெருக்கடியையும் பாகிஸ்தான் சந்தித்து வந்தது. இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டை பாகிஸ்தான் சில வாரங்களுக்கு முன்னர் தளர்த்தியது.

பாகிஸ்தானில் வரும் ஜூன் மாதத்தில் கரோனா தொற்று அதிகரிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் முன்னரே எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT