விபத்துக்குள்ளான பாகிஸ்தானில் பிஐஏ விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் லாகூரிலிருந்து 98 பயணிகள், 9 ஊழியர்கள் என மொத்தம் 107 பேருடன் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்ற பிஐஏ விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே வந்தபோது சிக்னலை இழந்தது.
இதனைத் தொடர்ந்து கராச்சி நகர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
தற்போது இந்த விமான விபத்தில் 97 பேர் பலியாகி உள்ளனர். 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
விமானத்தில் லேண்டிங் கியரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமான விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் விமானத் துறை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “விபத்துக்குள்ளான விமானத்தில் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றார்.
பாகிஸ்தானில் கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம்தான் ஊரடங்கு தளர்த்தப்பட்டு போக்குவரத்துகளும் அனுமதிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது.