உலகம்

கரோனா நிலவரம்: உலகம் முழுவதும் 51,97,863 பேர் பாதிப்பு; 20,82,626 பேர் குணமடைந்தனர்

செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் 51,97,863 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51,97,863 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 16,20,902 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து ரஷ்யாவில் 3,08,705 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா வைரஸுக்கு 3,32,900 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழப்பைப் பொறுத்தவரை இதிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 96,354 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரிட்டனில் 36,042 பேர் பலியாகி உள்ளனர் ” என்று தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் சமீபகாலமாக உயர்ந்து வருகிறது. சுமார் 20,82,626 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின்,பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சவாலாக உள்ளது.

SCROLL FOR NEXT