ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி 
உலகம்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடை அதன் பலவீனத்தைக் காட்டுகிறது: ஈரான் விமர்சனம்

செய்திப்பிரிவு

ஈரான் அதிகாரிகள் மீது அமெரிக்கா விதிக்கும் பொருளாதாரத் தடைகள் அதன் பலவீனத்தைக் காட்டுகிறது என்று ஈரான் அரசு விமர்சித்துள்ளது.

ஈரானில் பெட்ரோல் உயர்வை எதிர்த்து நவம்பர் மாதத்தில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கொல்லப்பட்டனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்தச் சம்பவம் மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டிய அமெரிக்கா, ஈரான் உள்துறை அமைச்சர் ரஹ்மானி பாசில் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் கூறும்போது, “ எங்கள் மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான பொருளாதாரத் தடைகள் அதன் பலவீனத்தைக் காட்டுகிறது. அமெரிக்க நிர்வாகம் விரக்தி மற்றும் குழப்பத்தில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் ஏற்பட்டு வந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது.

அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும். இந்நிலையில் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்து வருகிறது.

SCROLL FOR NEXT