உலகம்

9/11 துயரப் பதிவின் அடையாள பெண்மணி மரணம்

செய்திப்பிரிவு

அமெரிக்காவின் வர்த்தக மையம் தாக்குதலுக்குள்ளானபோது, அந்த பேரழிவிலிருந்து மீண்ட 'அடையாள' பெண்மணி (42) வயிற்று புற்றுநோயால் மரணமடைந்தார்.

9/11 தாக்குதலில் சிக்கி எழுந்த அவரது தெளிவற்ற புகைப்படம் இன்றும் அந்த தாக்குதலின் 'அடையாள' சின்னமாக பலரது மனதில் புதைந்துள்ளது.

2001ம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் உள்நாட்டு விமானங்களை கடத்திய அல்காய்தா தீவிரவாதிகள் நியூயார்க்கில் இருந்த இரட்டை வர்த்தக கோபுரங்கள் மீது கடும் தாக்குதலை நடத்தி அதனை தகர்த்தினர். உலகெங்கிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2,753 பேரை இந்தத் தாக்குதல் பலிகொண்டது. லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

தாக்குதலால் நியூயார்க் நகரமே அதிர்ந்தது. அமெரிக்கா கொதித்தது. பிரம்மாண்ட இரட்டைக் கோபுரங்கள் சரிந்ததில் பெரும் தூசுப் புயலே நியூயார்க்கை சூழ்ந்ததுபோல இருந்தது.

அடுக்காய் சரிந்துகொண்டிருந்த இரட்டைக் கோபுரத்தின் 81வது தளத்தில் இருந்தவர் மார்ஸி பார்டர்(42). இரட்டைக் கோபுரம் சரிவதை உள்ளிருந்த செய்தியாளர்கள் படம் பிடித்து கொண்டிருந்தபோது மோசமான புகைக்கு நடுவே ஒரு பெண் மீண்டு எழுந்ததை பதிவு செய்தனர்.

வர்த்தக மையத்தை முதல் முறை விமானம் தாக்கியபோது, இடிபாடுகளிலிருந்து சுதாரித்து மார்ஸி பார்டர் தரை தளத்தை வந்தடைந்து விட்டார். பின்னர் அடுத்ததாக இரண்டாவது விமானமும் கோபுரத்தினுள் நுழைந்து மிச்சம் இருந்த பகுதிகளையும் தரை மட்டமாக்கியது. அப்போது, மார்ஸி பார்டர் சாம்பல் புகையிலிருந்து எழுந்து நிற்கும் தெளிவில்லாத, துயரத்தை ஏற்படுத்தும் அந்த புகைப்படம் சர்வதேச அளவில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தாக்குதலிலிருந்து தப்பித்த மார்ஸி பார்டர், பல உடல் உபாதைகளால் அவதிப்பட்டு, குடும்பத்தைப் பிரிந்து மறுவாழ்வு மையத்தில் வாழ்ந்தார். அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதியான நிலையில், அதற்கு மற்றும் பல பிரச்சினைகளுக்கும் கடந்த 2014 முதல் அவர் தொடர் சிகிச்சைகளையும் பெற்று வந்தார். அவரது சொத்துகள் அனைத்தும் சிகிச்சைக்காக மட்டுமே அழிந்தன.

இந்த நிலையில், இரட்டைக் கோபுர தாக்குதலால் ஆட்கொள்ளப்பட்ட மார்ஸி பார்டர் திங்கள்கிழமை மாலை உயிரிழந்ததாக அவரது சகோதரர் ஜான் பார்டர் தெரிவித்துள்ளார். அமெரிக்க வரலாற்றில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் மிகவும் மூர்க்கமான அந்த இரட்டை கோபுரத் தாக்குதலில் உயிர் பிழைத்த மார்ஸி பார்டர் போல, இன்னும் நூற்றுக்கணக்கானோர் 9/11 தாக்குதலின் துயரத்திலிருந்து உடல் மற்றும் மனதளவில் மீளாமல் வாழ்கின்றனர்.

-தி இண்டிபெண்டெண்ட்

SCROLL FOR NEXT