உலகம்

சிங்கப்பூர் வரலாற்றில் முதன்முறையாக ஜூம் வீடியோ கால் மூலமாக குற்றவாளிக்கு மரண தண்டனை

செய்திப்பிரிவு

மலேசியாவைச் சேர்ந்தவர் புனிதன் கணேசன். இவருக்கு வயது 37. இவர் மீது சிங்கப்பூரில்கடந்த 2011-ம் ஆண்டு ஹெராயின் போதை பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது முதல் சிங்கப்பூர் நீதிமன்றங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

சிங்கப்பூரை பொறுத்த அளவில் போதை பொருள் விவகாரம் என்பது மிகப்பெரிய குற்றம். இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறிதளவும் சகிப்புத்தன்மையை நீதிமன்றம் காட்டாது. போதை பொருள் கடத்தலுக்கு எதிராக மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு சட்டங்கள் இங்கு கடுமையான உள்ளன.

புனிதன் கணேசன் மீதான வழக்கு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் சிங்கப்பூர் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த இரு மாதங்களாக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறவில்லை.

இந்நிலையில் ஜூம் வீடியோ கால் மூலமாக, புனிதன் கணேசனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். புனிதன் கணேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பீட்டர் பெர்னாண்டோ இதுகுறித்து கூறும்போது, “புனிதன் கணேசன் வழக்கில் நீதிபதியின் தீர்ப்பு ஜூம் வீடியோ கால் வழியாக வந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம். விரைவில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வோம்” என்றார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதங்கள் வீடியோ கான்பரன்ஸ் வழியாக நடைபெற்றது என்று சிங்கப்பூர் உச்ச நீதிமன்றத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சிங்கப்பூர் வரலாற்றிலேயே ஜூம் கால் வழியாக ஒரு குற்ற வழக்கில் மரண தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும். அதே நேரத்தில் ஜூம் வீடியோ கால் வழியாக தண்டனை விதிக்கப்பட்டதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT