கரோனா வைரஸ் எவ்வாறு பரவியது, எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன உள்ளிட்டவை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா உள்பட 102 நாடுகள் வைத்த கோரிக்கையை உலக சுகாதாரஅமைப்பு ஏற்றுக்கொண்டது.
சரியான நேரத்தில், மிக விரைவாக முழுமையான விசாரணை தொடங்கப்படும். அதேசமயம், உலக நாடுகள் வழங்கும் நிதியை நிறுத்திவிடக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன் வேண்டுகோள் விடுத்தார்
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீன அரசின் வைரஸ் ஆய்வகத்தில் இருந்து தான் கரோனா வைரஸ் பரவியது என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. கரோனா வைரஸ், ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட கிருமி என்று இந்திய அமைச்சர் நிதின் கட் கரியும் உறுதிபட தெரிவித்துள்ளார். ஆனால் அதை சீனா மறுத்து வருகிறது.
இதுதொடர்பாக சர்வதேச நிபுணர்கள் குழு சீனாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், சர்வதேச நிபுணர் குழுவை அனுமதிக்க மாட்டோம் என்று சீனா வாதிட்டு வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் தற் போதைய தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார், கரோனா வைரஸ் குறித்த உண்மைகளை சீனாவோடு சேர்ந்து உலக சுகாதார அமைப்பும் மறைத்துவிட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் கொள்கைகளை வகுக்கும் பிரிவான உலக சுகாதார சபை யின் 2 நாள் மாநாடு, ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. முதல்முறை யாக இந்த மாநாடு காணொலி காட்சி மூலம் நடக்கிறது. இந்த மாநாட் டுக்கு முன்னதாக உலக சுகாதார அமைப்பிடம் ஐரோப்பிய யூனியன் சார்பில் தீர்மானம் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
அதில் கரோனா வைரஸ் எங்கு தோன்றியது, உலகம் முழுவதும் மக்களிடம் வைரஸ் பரவ யார் கார ணம் என்று விசாரணை நடத்த வேண் டும். இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று விளக்க வேண்டும் என தீர்மானத்தில் வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு இந்தியா உட்பட 120-க்கும் மேற் பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் நேற்று அதன் தலைவர் டெட்ராஸ் அதானன் பேசுகையில் “ உலக நாடுகளின் கோரிக்கையின்படி மிகவும் விரைவாக, உரிய நேரத்தில் முழுமையான விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்பதை உறுதி செய்கிறேன். அதுவரை எந்தநாடும் உலக சுகாதாரஅமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டாம்.
கரோனா வைரஸ் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும். உலகிற்கு மற்றொரு திட்டம் அவசியமில்லை, மற்றொரு செயல்முறை அவசியமில்லை, மற்றொரு குழுவோ, அமைப்போ தேவையில்லை. உலக சுகாதார அமைப்பை வலிமைப்படுத்துவோம், அதன் நிதிவசதி, அமைப்பு முறை ஆகியவற்றை வலுப்படுத்துவோம்.
இந்த பெருந்தொற்று நோயிலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த உலகம் கருவிகளையும், அறிவியலையும், வளங்களையும் இழக்கவில்லை.ஆனால் செயல்முறையை மட்டும் மாற்ற வேண்டும். இந்த கரோனா வைரஸிலிருந்து ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாடும் பாடம் கற்க வேண்டும்.
வெளிப்படைத்தன்மையுடன், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு எதி்காலத்தில் இதுபோன்ற பெருந்தொற்று நோய்கள் வராமல் தடுக்கவும், வந்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளையும் வழங்குவோம்” எனத் தெரிவித்தார்
முன்னதாக மாநாட்டில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங் “ கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக சீனா 200 கோடி டாலர்களை வழங்கும். உலக சுகாதார அமைப்பு நடத்தும் முழுமையான ஆய்வுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் சீனா வழங்கும்” எனத் தெரிவித்தார்