கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களுக்கு அறிகுறி வரும் முன்பே நாயின் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் திட்டத்தின் பரிசோதனை முயற்சிகளை பிரிட்டன் இன்று முறைப்படி தொடங்கியது.
பிரிட்டனில் உள்ள மில்டன் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு மெடிக்கல் டிடெக்ஸன் டாக் என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. அதாவது, ஒரு நோயாளியின் உடலில் உருவாகும் வியர்வை வாசத்தை வைத்து, அதே நோய் எத்தனை பேரைத் தாக்கி இருக்கிறது என்று கண்டுபிடிப்பதாகும்.
வியர்வை வாசத்தை அடிப்படையாக வைத்து அதே வாசம் வரும் மற்ற நபர்களை, எந்த விதமான பரிசோதனையும் இன்றி நாய்கள் தனது மோப்ப சக்தியால் உணர்ந்துகொள்ளும். இதற்கு முன் நாய்கள் மூலம் புற்றுநோய், பார்க்கின்ஸன் நோய், பாக்டீரியா தொற்று போன்றவை வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மில்டல் கெய்னஸ் நகரில் உள்ள நாய்கள் காப்பகத்தில் கடந்த மாதத்திலிருந்து கரோனா வைரஸ் பாதித்த நோயாளியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்த பயிற்சி நாய்களுக்கு கடந்த மாதத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.
துர்ஹாம் பல்கலைக்கழகம், மெடிக்கல் டிடெக்ஸன் டாக் அமைப்பு ஆகியவற்றுடன் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிகல் மெடிசன் இணைந்து இந்தப் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இதற்காக பிரிட்டன் அரசு சார்பில் 5 லட்சம் பவுண்டுகள் (ரூ.4.59 கோடி) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன.
முதல் கட்டமாக இந்தப் பரிசோதனையில் ஈடுபடுத்தப்படும் நாய்கள், மனிதர்கள் உடலிலிருந்து வெளியேறும் வியர்வை வாசத்தின் மூலம் கரோனாவைக் கண்டறிய முடியுமா என்பது குறித்து சோதனை நடக்கும்.
இதுகுறித்து பிரிட்டனின் புத்தாக்கத்துக்கான அமைச்சர் லார்ட் பெத்தல் கூறுகையில், “இதற்குமுன் இந்த மெடிக்கல் டிடெக்ஸன் நாய்கள் பல்வேறு நோய்களைக் கண்டுபிடித்துள்ளன என்பதால் இப்போது கரோனா வைரஸுக்கும் பயன்படுத்துகிறோம். இந்த முயற்சியின் மூலம் விரைவில் முடிவுகள் கிடைக்கும் என நம்புகிறோம். இந்தப் பரிசோதனையில் துல்லியத்தன்மை மிகவும் முக்கியம். ஒருவேளை நாய்கள் துல்லியத்தன்மையோடு கண்டுபிடித்தால் எதிர்காலத்தில் கரோனா பரவுவது விரைவில் கட்டுப்படுத்தப்படும்.
இந்தப் பரிசோதனையில் லேப்ரடார் வகை நாய்கள், காக்கர் ஸ்பானியல்ஸ் வகை நாய்கள் என மொத்தம் 6 நாய்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான பயிற்சி முடிந்தபின், கரோனா அறிகுறி இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கூட நாய்களால் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனை முயற்சிக்காக லண்டன் சுகாதாரத்துறையினர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து வியர்வை வாசத்தின் மாதிரிகளையும், கரோனாவால் பாதிக்கப்படாதவர்கள் வியர்வை மாதிரிகளையும் சேகரித்து வைத்துள்ளனர்,
இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால் ஒருமணி நேரத்துக்கு 250 பேரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களா எனக் கண்டறிய முடியும்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிகல் மெடிசன் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் லோகன் கூறுகையில், “நாய்களின் கூர்மையான மோப்ப சக்தியால், எளிதாக, உச்சபட்ச துல்லியத் தன்மையுடன் நோயாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். இதற்கு முன் மலேரியா, புற்றுநோய் போன்ற நோய்களை நாய்கள் கண்டறிந்துள்ளன.
ஆதலால், கரோனா நோயாளிகளை எளிதில் அடையாளம் காண இந்த முயற்சி முக்கிய மைல்கல்லாக அமையும். எங்கள் முயற்சி புரட்சிகரமானதாக அமையும். ஏனென்றால் கரோனா நோய் சுவாசம் தொடர்பான நோய், சுவாசம் தொடர்பான நோய் ஒருவரைத் தாக்கும்போது அவரின் உடலின் வியர்வையின் வாசம் மாறக்கூடும் என்பதால் நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.